Skip to main content

கதை கதையாம் கத்தரிக்காய்

                             

கதை கதையாம் கத்தரிக்காய்
………………………………………..
மதியச் சாப்பாட்டிற்கும்
இரவுச் சாப்பாட்டிற்கும்
இடையான நேரம்
எல்லோரும் வட்டமாய்
கதிரை போட்டிருந்து
கதைத்துக் கொண்டிருந்தார்கள்

முன் வீட்டில் காஸ்
முடிந்து விட்டதாம்
மரக்கறி விலை சிறிது
குறைந்துவிட்டதாம்
கோவிட் தொற்று மீண்டும்
அதிகரிக்கிறதாம்
மாஸ்க்கெல்லாம் மூக்கின் கீழ்
இறங்கிவிட்டதாம்
வான்படைக்கு வைத்தியாசலை
கட்டினமாம்
புதுசாவொரு புத்தர் சிலை
திறக்கினமாம்
திங்கள்வரை மின்சாரம்
வெட்டவில்லையாம்
பாரதியோட கண்ணம்மா
சேரவில்லையாம்
பதின்மூன்றாம் திருத்தச்சட்டம்
திருகுபடியாம்
தமிழ்க்கட்சிகள் தங்களுக்க
இழுபறியாம்
அரசியல்வாதிகளை பொதுமக்கள்
நம்பவில்லையாம்
அப்பால் நின்று புதினம் மட்டும்
பார்க்கினமாம்
வானூர்தியில் வந்திறங்கிக்
கொண்டாட்டமாம்
வயலிலே விளைச்சலின்றித்
திண்டாட்டமாம்
புலம்பெயர்ந்தார் வாய்ப்பேச்சு
தாங்கவில்லையாம்
அவையின்ர நிதியுதவி
போதவில்லையாம்
தெருவிலறங்கிப் போராடுறவை
திருந்தவில்லையாம்
போராடித்தானிங்கொன்றும்
சாதிக்கேலையாம்
‘நீதிக்கான அணுகல்’
நடமாடும் சேவையாம்
மனித உரிமைகளை
புதுசாப் பாதுகாக்கினமாம்
‘திண்ணை’யில சாப்பாடு
திறமாயிருக்குமாம்
தின்றுவிட்டுப் படுத்தால்
விடிந்து விடுமாம்

அளந்த கதை போதுமென்று- அம்பலத்தார்
கோவிலுக்கு வெளிக்கிட்டார்
கமலமன்ரி மகளோட- கோல்
கதைக்கக் கிளம்பிற்றார்
மாசிலாமணி பேஸ்புக்கைச்
சுரண்டத் தொடங்கிட்டார்
அவற்றை மனிசி புட்டுக்கென்ன
துணையென்று யோசிக்கிறார்
அன்ரனி ஐ.இ.எல்.டி.எஸ்க்குப்
படிக்கவென்று குந்துகிறான்
காரில் மாமா எலக்ரிக் குக்கர்
வாங்கியரப் போகிறார்

நாங்கள் எவளத்தைக் கண்டம்
இதையும் கண்டு போவம்
ஆச்சி புறுபுறுத்துக்கொண்டு
பிலாக்குழை குத்தக் கம்பியோட போகுது.




Comments

Popular posts from this blog

Are you listening?