Skip to main content

நினைவுகள்



உக்கிரமாய் வெயில் உச்சி மண்டையால் இறங்கி
தொண்டைக்குழியில் சொட்டு ஈரமில்லாமல் வறட்டிவிட
பள்ளிவிட்டு வரும் வழியில் பசியும் தாகமும்
ஒன்றாய்க் குடலைப் புரட்டி எடுக்க- வரமாய்
செம்மமஞ்சள் நிறத்தில் ஜூஸ் வாங்கி வாயாலிறக்கி
தொண்டைக்குழியை நனைத்து வயிறைக் குளிர்வித்து
புளிப்புச் சுவையேறி நாக்குச் சப்புக்கொட்டி
கடைசித்துளியையும் உறிஞ்சி எடுக்க
வெள்ளைச்சீருடையில் வந்த நினைவும்

எங்கேயாவது இருந்திட்டு அப்பா வாங்கிவரும்
மிரண்டா சோடாவை அடித்துப் பிடித்து அமிர்தம்போல் நினைத்து
ஒவ்வொரு மிடரையும் ஐயோ முடியப் போகுதே என்று மெதுவாய்க் குடித்து
கடைசிச் சொட்டையும் பொறுமையாய் போத்தலைக் கவிழ்த்துப் பிடித்து
வாயிலிட்டு நாவெல்லாம் செம்மஞ்சளாக்கி
இரண்டு மிடர் உனக்குக் குறைவு என்று
அப்பால் நிக்கும் சோதரனை கடுப்பாக்கி
நாக்கு நீட்டிப் பழித்து
அவனடிப்பதற்குள் ஓடியொளித்த நினைவும்

சோடாப்போத்திலை திறக்கையில் முன்னறிவிப்பின்றி
நுரையெல்லாம் படையெடுத்து வெளியே தள்ளுவதுபோல
கடல்தாண்டிய தேசத்து கடற்கரையில் நிகழ்ந்த சூரிய அஸ்தமனக் காட்சி
நினைவுச் சுரங்கத்தின் கதவைத் திறந்து
நினைவுகளை அள்ளி வெளியில் கொட்டிவிட- கண்முன்
பரவிக் கிடந்த செம்மஞ்சள் திரவத்தை
குந்தியிருந்து சுட்டுவிரலால் வழித்து வழித்து
நாவில் தடவிச் சப்புக்கொட்டினேன்

இப்போ தாரளமாய்க் கிடைக்கும்
செம்மஞ்சள் திரவெமெதுவும் தராத திருப்தி
அந்த அந்திப்பொழுதில்- நான்
இன்னமும் நினைத்து நினைத்து
சப்புக்கொட்டிக்கொண்டிருக்கிறேன்
கடல் நினைவுகளின் நீட்சியாய் நீண்டு கிடக்கிறது

Comments

Popular posts from this blog

Are you listening?