வேண்டும் என்று எந்தப் பிள்ளையும் பிறப்பதில்லை
பிள்ளை எதற்கு வேண்டும் என்று பெறுவோரும்
ஆய்ந்தறிவதில்லை
பிள்ளைக்காக வாழ்வோ
வாழ்வுக்காகப் பிள்ளையோ
எதுவாகினும் இருந்து விட்டுப்போகட்டும்
பிள்ளைகள் ஒரு கட்டாயக் கட்டம்
பெறுவது கடமை
பெற்றதை வளர்ப்பது கடமை
வளர்ந்தது பெற்றோரைப் பார்ப்பதும் கடமை
கடமைகள் கடக்கமுடியாதொரு சமூகம்
பெறுவதும் வளர்ப்பதுமாய் கடந்துபோகட்டும்
கடந்து போகாதவரும்
கடமைகளைத் துறந்தவரும்
சாபங்களிலிருந்து
விடுதலையடையட்டும்
கடமைகள் கயிறாகி இறுக்காமல் போகட்டும்
வாழ்க்கை கட்டளைகளில்லாமல் நதியாகி ஓடட்டும்
உறவுகள் நதிக்கிளைகள் ஆகட்டும்
அவை கடல் தேடிப்போகட்டும்
நதிமூலத்தை நோக்கி
எந்த நதியும் ஓடுவதில்லை
கடல் தேடும் நதியை
நதிமூலம் சாடுவதுமில்லை
Comments
Post a Comment