Skip to main content

அவள் இருந்தாள்


அவள் இருந்தாள்
நீண்டு நெளிந்து பரந்து கிடந்த-நிலப்பரப்பை
கடக்க வேண்டும் என்று முயற்சி செய்யாமல்
அவள் இருந்தாள்
அதன் பாதி தூரத்தையாவது கடக்க வேண்டும் என்று ஒரு நினைப்பே இல்லாமல்
அவள் இருந்தாள்
அகால அமைதியுடன் பயணத்தை பற்றியொரு பதட்டமுமே இல்லாமல்
அவள் இருந்தாள்

எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தார்கள்
வியர்க்க வியர்க்க
மூச்சுத்தள்ள
அடித்துப் பிடித்து
ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு
தள்ளிக்கொண்டும்
எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தார்கள்

அங்கங்கே சிலர் நடந்துகொண்டிருந்தார்கள்
சாசுவாசமாக
கையை வீசி வீசி
பாடல்களை முணுமுணுத்துக்கொண்டு
மண்ணைக் காலால் அளைந்துகொண்டு
வாழ்க்கையை இரசித்து வாழ்வதாய் நினைத்துக்கொண்டு
அங்கங்கே சிலர் நடந்துகொண்டிருந்தார்கள்

சிலர் ஓடிக்களைத்து விழுந்து கிடந்தனர்
மீண்டும் எழும்ப வலுவில்லாமல்
தூக்கிவிட ஒரு மனிதரில்லாமல்
நீண்டு தெரியும் பாதையை
கையேலாததனத்துடன் பார்த்து
பெருமூச்சு விட்டுக்கொண்டு
சிலர் ஓடிக்களைத்து விழுந்து கிடந்தனர்

அவள் இருந்தாள்
இருந்து சாகாதே என்று சொல்பவரையும்
எழுந்து ஓடு என்று முட்டித் தள்ளுபவரையும்
வாழத் தெரியாதுனக்கென்று நகைப்பவரையும்
சும்மா இருந்து என்ன பயன் என்று கேட்பவரையும்
காலத்தையும்
கடந்துகொண்டு
அவள் இருந்தாள்

இருப்பின் வலியும் சுகமும்
வந்து போகும் நிரந்தரமற்ற தருணங்களையும்
மௌனமாக ஏற்றுக்கொண்டு
புயலாய்ச் சுழலும் மனவோட்டத்தையும்
பொங்கியெழும் உணர்வுக்கூட்டத்தையும்
அகால அமைதியால் விழுங்கிக்கொண்டு
அவள் தன் இருப்பை நிதானமாக எழுதிக்கொண்டிருந்தாள்

அவள் இருந்தாள்
அவள்தான் சாட்சி

(எஸ்.ராவின் ‘உறுபசி’ஐ வாசித்து, வாசித்தோரின் வாசிப்பநுபவத்தை செவிமடுத்த விளைவாக வந்து விழுந்த வரிகள்)





Comments

Popular posts from this blog

Are you listening?