Skip to main content

🖊கறுப்பு மை 🖊



நேசமிருந்த இடமெல்லாம்
இப்போது கோபம்
இல்லையில்லை வெறுமை

நரம்புகளுக்குள் புகுந்து நெளிந்து
உடலெல்லாம் வியாபித்து
பெருவிருட்சமாய்

விதை போட்டதாய் ஞாபகமில்லை
நீர் ஊற்றி வளர்த்தது யார்?
நினைவில்லை

வெட்டவேண்டும்
இது சரியில்லை
இராட்சதக் கிளைகளைப் பரப்பிக்கொண்டு
வெளிச்சம் உள்ளே வரவிடாமல்
கதைகளில் வரும்
பேய் மரம் போல!

வெட்டவேண்டும்
என்று சொல்கிறாளே தவிர
அவசரப்படவில்லை
பேய் மரத்தின்
நிசப்தமும் பயங்கரமும்
அது தந்த இருளும்
அவளுக்குப் புகலிடமாயிருந்தன
மனிதர்களோடு
எத்தனை நாட்கள்தான்
போலியாய்ப் பழகுவது?

எல்லோருக்குள்ளும்
ஒரு பேய் மரமிருக்குமோ!
ஒருவரும் காட்டுவதில்லை
அவளுக்குக் காட்டாமலிருக்க முடிவதில்லை
பேச்சிலும் மூச்சிலும்
எப்போதுமே ஒரு சூடு
கோபம் கறுப்பு மையாய்
நாக்கில் நின்றும்
விரல் நுனிகளிலிருந்தும்
கொட்ட கொட்ட
செய்யபோகும் சம்பவங்களை
சிந்தித்து சிந்தித்து
கிறுக்கியும் அழித்தும்
முடிவில்லா அத்தியாயங்களாய்
எழுதிக்கொண்டேயிருக்கிறாள்

மனித இயலாமையில்
எதற்கு இத்தனை கோபம்?
போட்டியும் பொறாமையுமாய்
ஆசையும் அவாவுமாய்
பொருள் தேடி நிலம் தேடி
பெயரும் புகழும் நிரந்தரமென்று
தத்தம் இருப்பிற்கான போராட்டமாய்
வாழ்வைக் கடத்தும்
விலங்குகள்தானே அவர்கள்?
மந்தைகளில் நின்று விலகி
விதிக்கு மாறாய்
ஓரமாய் வீதியை
வெறித்துப்பார்க்கும்
அந்த செம்மறிபோல
அவளும் இருப்பின் போராட்டத்தில்
துளியும் இஷ்டமில்லாமல்

பேய் மரம் இன்னும் பெரிதாய்
பயங்கரமாய்
அவள் அதனுள்
கொஞ்சம் கொஞ்சமாய்
தொலைந்துகொண்டிருக்கிறாள்
இல்லையில்லை வாழ்ந்துகொண்டிருக்கிறாள்

கறுப்பு மை
கொட்டி வழிந்து
அவள் கால்பதிக்கும்
இடங்களை
நனைத்து
நதிமூலம் தேடி
அலைந்துகொண்டிருக்கிறது.....

Comments

Popular posts from this blog

Are you listening?