💧
💧
குழாயைத் திறந்தேன்
இம்முறை தண்ணீர் வந்தது
எடுத்து இரண்டு சொட்டு
நாவில் விட்டேன்
ஆகா என்ன ஒரு சுவை!
போவோர் வருவோர்க்கெல்லாம்
தண்ணீர் தண்ணீரென்று
கூவி அழைத்துக்கொடுத்தேன்
குடித்துவிட்டு
அட தண்ணீர்!
எதற்கு இந்தக் கூப்பாடென்று
புதினமாய் பார்த்துவிட்டு
கடந்து போனார்கள்
பாதையோரமெல்லாம்
தண்ணீர்ப் பந்தல்கள்
மினரல் வாட்டர்
பிறாண்டட் வாட்டர்
இறக்குமதி செய்தது
பக்கத்துக் கிணற்றில் அள்ளியது
மேலதிக சுவை சேர்க்கப்பட்டது
சீனி அள்ளிக் கொட்டிக் கலந்தொன்று
மரபுச்சுவையோடு ஆறு ஐந்து
அமிர்தமென இரண்டு மூன்று
எனது குடிநீர்க்குழாயில்
தொடர்ந்து தெளிவாய்
தண்ணீர் வருவது அதிசயம்
பல நேரங்களில்
குழாயில் தண்ணீர் வருவதேயில்லை
கிணறு முட்டி வழிந்தாலும்
எனக்குக் குழாயைத் திறக்க
மனம் வருவதேயில்லை
திறந்து தண்ணீர் கலங்கலாய் வந்தால்
மனது கஷ்டமாகிப்போய்விடும்
மூடியே வைத்துக்கொள்வேன்
சில நேரங்களில்
கிணறு முட்டி வழிந்து
இதுக்குமேல் தாங்காது என்று தோன்றும்
குழாயைத் திறந்துவிடுவேன்
இன்றும் அப்படித்தான்!
ஆனால்
எனக்கிப்போது
கொட்டிய தண்ணீரை
குழாய் வழியே
அள்ளியூத்தி
குடித்தவரின் குரல்வளைகளைப் பிடித்து
‘தண்ணீரைத் திருப்பித்தா!’
என்று கத்தி
அவர்கள் குடித்த ஒவ்வொரு மிடரையும்
குழாய் வழியே
கிணற்றிற்குத் திருப்பியனுப்பிவிட வேண்டும்
என ஒரு இனம்புரியாத வெறி
இனிமேல்
குழாயைத் திறக்கக்கூடாது
நல்ல பழைய துணியொன்றை
உள்ளுக்குள் திணித்து
திருகியை மூடி
இறுக்கிக் கட்டிவிடவேண்டும்
திறந்தாலும் நான் மட்டுமே
அதில் தண்ணீர் குடிக்கவேண்டும்
குடிநீர்க்குழாயை
வன்மத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்
தண்ணீர் இன்னமும் சொட்டிக்கொண்டிருக்கிறது
சைக்.
Comments
Post a Comment