Skip to main content

கடமைவீரர்!

Kadamaiveerar


பெண்கள் தினமாம்
ஏதோ பொங்கல் தினம்போல
காலையில் வாழ்த்துச் சொன்னார்

மனிசி பதில் சொல்லும் முன்
முகநூலுக்குப் போய்
‘பெண்மை வாழ்க’ என்று பதிவிட்டார்

தன்போல் கடமை தவறா
கடமைவீரர்களின் கிறுக்கல்களுக்கெல்லாம்
ஒரு விருப்பிட்டார்
போட்டால்தான் திருப்பிப் போடுவார்கள்
கருத்து முக்கியமல்ல
இராமர் தெளிவாக இருந்தார்

சீதை சமைச்சிட்டு
சாப்பாடு கட்டிக்கொடுத்திட்டு
சாப்பிடாம வேலைக்கு ஓடுறார்
யார் கண்டார்?

பின்னேரம்
ஏதோ நிகழ்வாம்
பெண்கள் தினத்திற்கு

வேலை நேரத்தில
பாரதியார் கவிதையில்
நான்கு வரிகளை உருவிப்போட்டொரு
பேச்செழுதினார்
‘பெண்கள் நம் கண்கள்’
என்று முடித்தார்
இடது கண் துடித்தது
சகுனம் சரியில்லை
பெண்ணியவாதிகள்
கண்களை உருட்டக்கூடும்
வெட்டினார் கடைசி வரியை
எழுதினார்
‘பெண்மை வெல்கவென்று கூத்தாடுவோம்!’

“இஞ்சயப்பா,
பிள்ளைகளை சுவிமிங் கிளாசிலயிருந்து
கூட்டிக்கொண்டு வாறீங்களே?
நான் விழாக்கு வெள்ளென வாறெண்டெனான்.”
சீதை கெஞ்சினார்
இராமர் முறைத்தார்

பெடியளோடை
துடுப்பாட்டம் விளையாடிட்டு
குளிச்சு வெளிக்கிட்டு
மறக்காமல் எழுதின கடதாசியோடை
சாவகசமாக விழாக்குப் போனார்

எப்பவும் கோபமாய்ப் பேசிற
அந்த அக்கா இப்ப பேசி முடிச்சிருப்பா
போய் பேசிவிட்டு
சாப்பாடை ஒரு கை பார்த்துவிட்டு
இரண்டு கதிரையை அடுக்கிவிட்டு
உடனே வந்துவிடவேண்டும்
இராமர் தெளிவாக இருந்தார்

ஒலிவாங்கி பிடித்தார்
உரத்த குரலில் உணர்வுபூர்வமாய்
பேசித்தள்ளினார்
பேசி முடித்தபோது
கண்கள் கலங்கியிருந்தன

சாப்பிட்டார்
வந்து கதையாடியவர்களிடம்
‘வக்சீன் கட்டாயம் போடத்தான் வேண்டுமா?’
என்று தொடங்கி கருத்தாடினார்
சாப்பிட்ட வாயையும் கையையும்
கழுவிட்டுப் புறப்பட்டார்

பேசியவர்களுக்கு அன்பளிப்புகள்
வந்தோருக்கு நன்றிகள்- பிறகு
அலங்காரக் குத்துவிளக்கை பத்திரமாய் எடுத்து வைத்து
மிஞ்சிய உணவுகளைப் பகிர்ந்து கொடுத்துவிட்டு
தூங்கிய பிள்ளைகளைத் தூக்கிப்போட்டுக்கொண்டு
காரோடாத கண்ணகியை வீட்டில் இறக்கிவிட்டு
தன்வீடு திரும்பினார் சீதை

பெண்மை வெல்கவென்று கூத்தாடிய- இராமர்
உறங்கியிருந்தார்.

Comments

Popular posts from this blog

Are you listening?