எழுந்துவிட்டோம் என்று நினைக்கும் போதெல்லாம்
விழுத்திவிடுகிறது சுயஞானம்
பலவேளைகளில் மீண்டும்
எழுத்திருக்கவே தோணுவது இல்லை
எழுந்துதான் என்னத்தைக் காண!
விழுந்தே கிட
மிதிப்பவர் மிதித்து விட்டுப் போகட்டும்
மிதிப்பதா?
அந்தக் கால்களை வெட்டு
என்று மூளைக்கும் மனதுக்குமிடையே
முடிவில்லாப் போராட்டம்
முடிவுகள் கிடைத்த போராட்டங்கள் உண்டா?
ஒன்றிலிருந்து இன்னொன்று
அவை முடிவிலிகள்
இடைவேளைகளில் இளைப்பாறுவதற்காக
வெற்றிடங்கள்
மூளைக்கும் மனதுக்கும் அங்கே இடமில்லை
வெற்றிடங்கள்தான் எவ்வளவு அழகானவை!
இருட்டுக்குள் தெரியும் இருளைப் பார்த்திருக்கின்றீர்களா?
வெற்றிடங்களை வெறித்துப் பாருங்கள்
பிரபஞ்சத்தையும் கறுப்புத்துளைகளையும்கூட
வெற்றிடங்கள் காட்டிவிடும்
அந்த வெற்றிடங்களில் தொலைந்துபோய்விட வேண்டும்
இன்னார் வாழ்ந்தார் என்ற தடயங்கள் ஏதுமின்றி
தொலைந்துபோய்விட வேண்டும்
இருளோடு இருளாக
இல்லாமை
இருத்தலுக்கு சாட்சி
இருக்கின்றோம் என்று சொல்லாதே
என்கிறது மூளை
இருத்தலை உரக்கச் சொல்
என்கிறது மனது
வெற்றிடங்கள்தான் எவ்வளவு அழகானவை!
Comments
Post a Comment